×

மாண்புமிகு 29 பைசா மோடியை செல்லா காசாக்கி வீட்டுக்கு அனுப்புவோம்: சிதம்பரத்தில் திருமாவளவனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிதம்பரம் தெற்கு வீதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மாநில செய்தியாக இருந்த பானை சின்னத்தை விசிகவுக்கு தர மறுத்த தேர்தல் ஆணையத்தை சட்ட போராட்டத்தின் மூலம் வென்று காட்டி பானையை தற்போது இன்டர்நேஷனல் செய்தியாக்கிய பெருமை தேர்தல் ஆணையத்தையே சேரும்.

திருமாவளவனை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட்டை இழக்க செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் கட்டணமில்லா பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம் போன்ற திராவிட மாடல் செய்த சாதனைகளை எடுத்துச்சொல்லி வாக்குகள் சேகரித்து வருகிறோம். இந்த துணிச்சல் மோடி தலைமையிலான பாஜகவினருக்கு உண்டா ? 10 ஆண்டுகாலம் மத்தியில் ஆளும் மோடி அரசு நாட்டு மக்களுக்கு என்ன செய்தது? இயற்கை இடர்பாட்டின் மூலம் தமிழ்நாட்டில் ரூ.37 ஆயிரம் கோடி பாதிப்பு ஏற்பட்டது.

இதுவரையில் மத்திய அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணம் வரவில்லை. மாறாக அதானியின் வளர்ச்சிக்காக போராடுகிறார் பிரதமர் மோடி. நம்மிடம் இருந்து மத்திய அரசு ஜிஎஸ்டி மூலம் பெற்றுக்கொள்ளும் 1 ரூபாய்க்கு வெறும் 29 பைசாக்கள் மட்டுமே தமிழ்நாட்டிற்கு திரும்ப கிடைக்கிறது. 29 பைசா எப்படி செல்லாதோ அதேபோல மாண்புமிகு 29 பைசா மோடியை செல்லா காசாக்கி வீட்டுக்கு அனுப்புவோம்.

அப்போது 29 பைசா போஸ்டரை காட்டி பொதுமக்களிடையே பாஜ அரசு தமிழ்நாட்டிற்கு இழைத்து வரும் அநீதிகளை பட்டியலிட்டு பேசினார். நான் பிரசாரம் மேற்கொண்டது ஒரு ட்ரெய்லர் தான். ஆனால் 6ம் தேதி இங்கு தமிழக முதல்வர் பிரசாரம் மேற்கொண்டு பாசிச மோடி அரசு பற்றியும், கழக ஆட்சி என்னென்ன திட்டங்களை கொண்டுள்ளது என்பது பற்றியும் பேசுவார். இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதியுடன் பிரசாரத்தில் பங்கேற்ற திருமாவளவன், நேற்று டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றதால் பிரசாரத்தில் பங்கேற்கவில்லை.

The post மாண்புமிகு 29 பைசா மோடியை செல்லா காசாக்கி வீட்டுக்கு அனுப்புவோம்: சிதம்பரத்தில் திருமாவளவனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : 29 ,Paisa Modi ,Cella ,House ,Udayanidhi Stalin ,Thirumavalavan ,Chidambaram ,Liberation Tigers of India ,DMK ,Minister ,Chidambaram South Road ,Cella Kasaki ,
× RELATED சிறைக்கைதி உயிரிழப்பு